இறை நம்பிக்கையோ, மறை நம்பிக்கையோ இல்லாதவர் பெரியார். நிறைவாழ்வு வாழ்ந்தவர். அவரது சிக்கனம் எக்கணமும் எண்ணிப் பார்க்கத்தக்கது.

ஆடை அணிகலன்களில் அக்கறை செலுத்தமாட்டார். சட்டை அழுக்கடைந்தால் அதைப்பற்றி கவலைப்படமாட்டார். குளிக்க மாட்டார். வாரம் ஒரு மறை குளிப்பதே அரிது. விலையுயர்ந்த உணவுப் பண்டங்களுக்கு ஆனைப்படுவது கிடையாது. சாலையோரக் கடைகளில் கிடைப்பதை வாங்கி சாப்பிடுவார். பொதுவாக ஒரு துறவி போலவே வாழ்ந்தார். திடீரென ஒலு நாள் துறவியாக மாறிவிட அவர் மனம் நாட்டம் கொண்டது.

பெரியாரின் சில நடவடிக்கைகளை அவர் அப்பா கண்டித்தார். இது பெரியாருக்குப் பிடிக்கவில்லை. ஏற்கெனவே குழந்தை இறந்த மனத்துயரம். இந்தச் சூழ்நிலையில் ஈரோடு விட்டுப் புறப்பட்டார்.

தங்கை கணவருடன் காசிக்குச் செல்ல ஈரோடு புகைவண்டி நிலையம் வந்தார். அங்கே இவர்களுடன் பெரியாரின் நண்பர் ஒருவரும் சேர்ந்துகொண்டார்.

மூவரும் ஈரோட்டிலிருந்து சென்னை சென்றடைந்தனர். சென்னையில் ஈரோட்டைச் சேர்ந்த ஒருவரை பெரியார் பார்த்துவிட்டார். அவர் கண்களில் படாமல் மறைந்து ஒதுங்கினார். உடன் வந்த இருவரும் ஊர் திரும்பி விடலாம் என்றார்கள். ஆனால், பெரியார் காசிக்குச செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக நின்றார். எனவே, கூட வந்தவர்களுக்குச் செலவுக்கு பணம் கொடுத்தார். அவர்களை ஈரோட்டிற்குத் திருப்பி அனுப்பிவிட்டார். அவர் மட்டும் தனியே புறப்பட்டார்.

பெரியாரிடம் தங்கநகைகள் இருந்தன. அவற்றை பத்திரமாக வைத்துக்கொண்டார். கையிலிருந்த பணத்தைக்கொண்டு பெஜவாடா வரை புகைவண்டியில் பயணம் மேற்கொண்டார்.

பெஜவாடாவிலை சத்திரம் ஒன்றில் தங்கினார். அந்தச் சத்திரத்தில் இலவசமாகத் தங்கிக்கொள்ளலாம். எனவே, பெரியார் அங்கே தங்கினார்.

சத்திரத்தில் தங்கியிருந்தபோது கோயமுத்தூரைச் சேர்ந்த தளபதி என்பவரும், தஞ்சையைச் சேர்ந்த வேங்கட்ட ரமண ஐயர் என்பவரும் பெரியாருக்கு நண்பர் ஆனார்கள். மூவருமே காசிக்குச் செல்ல திட்டம் தீட்டினார்கள். ஆனால், செலவுக்கு போதுமான பணம் இல்லை. எனவே அவர்கள் பெஜவாடா விட்டுப் புறப்பட்டு ஹைதராபாத் சென்றார்கள்.

ஹைதராபாத்தில் பிராமண நண்பர்கள் இருவரும் அரிசியை பிச்சையாகப் பெற்று வந்தார்கள். பெரியார் உண்டியல் குலுக்கி காசு சம்பாதித்தார். கிடைத்த அரிசியைக்கொண்டு, மூவரும் சமைத்து சாப்பிட்டார்கள்.

வயிறு நிறைந்த பின்னர், மூவரும் வாதம் செய்வதில் ஈடுபட்டனர். பிராமண நண்பர்கள் இருவரும் ஆத்திகம் பேசுவார்கள். பெரியார் நாத்திகக் கருத்துகளை எடுத்துக்கூறி அவர்களின் விவாதங்களை மறுத்துப் பேசுவார். தெருவில் போவோர், வருவோர் இவர்களின் விவாதங்களைக் கேட்டு ரசித்து மகிழ்வார்கள். அப்படி இவர்களது உரையாடலை கேட்டு மகிழ்ந்தவர்களில் ஒருவர் முருகேச முதலியார். அவர் சொந்த ஊர் காஞ்சிபுரம். ஹைதராபாத் சமஸ்தானத்தில் தலைமை எழுத்தராகப் பணியாற்றி வந்தவர்.

முருகேச முதலியார் பெரியாரையும் அவரது இரு நண்பர்களையும் தம் வீட்டிற்கு விருந்தாளியாக அழைத்தார். அவரது இல்லத்திலேயே தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்தார். மூவரும் வழக்கம்போல் பிச்சை எடுத்தே சாப்பிட்டு வந்தார்கள்.

இதனைக் கண்ட முதலியார் மனம் கலங்கினார். பின்னர் அங்குள்ள தமிழர்களின் உதவியோடு பணம் வசூல் செய்து கொடுத்தார்.

நாளுக்கு நாள் இவர்களது பெருமை உயரலாயிற்று. ரங்கநாதம் நாயுடு என்பவர் இவர்களை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு கதா காலட்சேபம் செய்யச் சொன்னார்.

பிராமண நண்பர்களில் ஒருவரான தளபதி ஐயர் இராமாயணத்தை வடமொழியில் படிப்பார். வேங்கட்ட ரமண ஐயர் அதைத் தமிழில் விளக்கிக் கூறுவார். ஹைதராபாத்திலே உள்ளவர்களுக்குத் தெலுங்குதான் தெரியும். பெரியாருக்குத் தெலுங்கு பேசத் தெரியும். எனவே, அவர் நண்பர்கள் கூறும் இராமாயணக் கதையை தெலுங்கில் மொழிபெயர்த்துச் சொல்வார்.

பெரியாரின் மொழிபெயர்ப்பு, விறுவிறுப்புடன் அமைந்திருக்கும். தளபதி ஐயர் சொல்வதை அப்படியே மொழிபெயர்க்காமல் நகைச்சுவையோடு செய்திகளைக் கூறுவார். குட்டிக் கதைகள் சொல்வார். தனது நாத்திகக் கருத்துகளை நயமாகச் சேர்த்து விடுவார். கூட்டம் பெரியாரின் பேச்சில் மயங்கிக் கிடந்தது.

நாட்கள் நகர்ந்தன. மூவரின் காசி ஆசை வளர்ந்து கொண்டேயிருந்தது. ஒரு நாள் ஹைதராபாத் நகர் விட்டுப் புறப்பட்டார்கள்.

பெரியாரிடம் முருகேச முதலியார் மிகுந்த அன்பு கொண்டவராய் இருந்தார். எனவே அவர் பெரியாரிடம், பிராமண நண்பர்களுடன் செல்ல வேண்டாம் என்று தடுத்தார். ஆனால், பெரியாரோ அதற்குச் சம்மதிக்கவில்லை. என்னோடு வந்த அவர்களைப் பாதியில் விட்டுச் செல்வது சரியல்ல என்று கூறிவிட்டார்.

பெரியாரிடம் தங்கநகைகள் இருந்தன. அவற்றைக் காசிக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என்றார் முதலியார். அதனை ஏற்றுக்கொண்டார் பெரியார். நகைகளை அவரிடமே ஒப்படைத்தார். என்னென்ன நகைகள் அவரிடம் கொடுக்கப்பட்டன என்பதையும் ஒரு சீட்டில் எழுதி வாங்கிக்கொண்டார். ஒரே ஒரு மோதிரம் மட்டும் அணிந்துகொண்டார்.

காசிக்குச் செல்லம் வழியில் மூவரும் கல்கத்தாவில் முப்பது நாட்கள் தங்கினார்கள். சுவாமி விவேகானந்தரும், சுபாஸ் சந்திரபோஸும் வாழ்ந்த கல்கத்தா நகரை சுற்றிப் பார்த்தார்கள். கல்கத்தாவில் நகரத்தார்கள் நிறைய வசித்தார்கள். அவர்களிடம் பண உதவி பெற்று மூவரும் காசி வந்தடைந்தார்கள்.

காசி இந்துக்களின் புண்ணியத்தலம் என்று காலங்காலமான நம்பிக்கை. கங்கையாறு கரைபுரண்டோடும் காட்சி.. காண்போரை கவர்ந்திழுக்கும்.. காசியில் கங்கைக் கரையில் உள்ள அறுபத்து நான்கு புனித நீராட்டு இடங்களில் மூவரும் நீராடினார்கள். கோயில்களுக்குச் சென்றார்கள். காசி அரண்மனையைச் சுற்றிப் பார்த்தார்கள்.

கங்கையில் நீராடினால் பாவங்கள் கரையும் என்பது நம்பிக்கை. அது உண்மையோ, பொய்யோ பெரியாது. மூவரின் கையிலிருந்த காசு கரையத் தொடங்கிற்று.
காசிக்கு வந்தவர்கள், காசில்லாமல் ஆனார்கள்.

பிராமண நண்பர்கள் இருவரும் பிரிந்து சென்றுவிட்டார்கள். பெரியார் தனித்து விடப்பட்டார். பசி வயிற்றைக் கிள்ளியது. ஒவ்வொரு சத்திரமாக ஏறி இறங்கினார். எல்லா சத்திரங்களிலும் சாப்பாடு போட்டார்கள். ஆனால், பெரியாருக்கு மட்டும் சாப்பாடு கிடைக்கவில்லை…… காரணம்?

அந்தச் சத்திரங்களில் பிராமணர்களுக்கு மட்டுமே சாப்பாடு என்பது விதி. பிராமணர் அல்லாதவர்களுக்குப் பச்சைத் தண்ணீர் கூட தரமாட்டார்கள். பசியின் கொடுமையால் கூட்டத்தில் முண்டி அடித்து ஒரு சத்திரத்தினுள் சென்றுவிட்டார் பெரியார். இவரது மீசையையும், தலை முடியையும் பார்த்து அங்கிருந்தவர்கள் இவரை விரட்டிவிட்டார்கள்.

பெரியார் கோபத்துடன் வெளியே வந்தார். அந்த நேரம் சாப்பிட்ட எச்சில் இலைகளை வெளியே கொண்டுவந்து போட்டார்கள். பார்த்தார் பெரியார். அந்த எச்சில் இலைகள் நடுவே உட்கார்ந்தார். இலைகளில் மிச்சமாகியிருந்த உணவுப் பொருட்களை எடுத்துச் சாப்பிட்டார். என்னே கொடுமை!

பசித்துன்பம்.

பெரும் பணக்காரர், வள்ளல் பரம்பரை. வீட்டிற்கு வருவோர்க்கெல்லாம் விருந்து படைத்து மகிழும் குடும்பம். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த பெரியார் எச்சில் இலையை உண்டார். இந்தக் கொடுமை அவராகத் தேடிக்கொண்டது.

அவர் அதற்காக வருந்தவில்லை. பசியின் பாதிப்பால் மற்றொரு உண்மையையும் பெரியார் உணர்ந்தார். அந்தப் பாதிப்பு அவரை வெகுவாக பாதித்தது. அது என்ன பாதிப்பு?
எங்கு சென்றாலும் பிராமணர்களுக்குத்தான் உணவு அளித்தார்கள். பிராமணர் அல்லாதவர்களை விரட்டியடித்தார்கள். இந்தச் செயல்கண்டு வெகுண்டார் பெரியார். கோபத்தில் கொதித்துப் போனார்.

புண்ணியம் தேட வந்த இடத்தில் கூடவா ஏற்றத்தாழ்வு பார்ப்பது? என்ன மனிதர்கள்? என்று மனம் வெதும்பினார்.

பெரியாரின் ஆழ்மனத்தில் பிராமண எதிப்பு வெறுப்பு, வேர் ஊன்றியது. காலம் செல்லச் செல்ல…. வேர் முளைவிட்டு….. செடியாகி….. மரமாகி……. கிளை பரப்பியது…..!
இவ்வளவு இன்னல்களுக்கு இடையேயும் பெரியார் தன் கையில் இருந்த மோதிரத்தை விற்கவோ அடகு வைக்கவோயில்லை…. அதுதான் சிக்கனம். அவர்தான் பெரியார்.
பெரியார் மொட்டையடித்துக்கொண்டார். மீசையை எடுத்து விட்டார். பட்டை போட்டுக்கொண்டார். பண்டாரம் ஆனார் பெரியார். பரதேசிக் கோலத்தோடு காசியில் பலவகையிலும் துன்பங்களுக்கு ஆளானார்.

சைவமடம் ஒன்றில் வேலை பார்த்தார். பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். கங்கை கரையில் இறந்து போனவர்களை எண்ணி சில கருமங்கள் செய்ய வருவார்கள். அவர்கள் போடும் சோற்றுப் பிண்டங்களை எடுத்துச் சாப்பிட்டு வயிற்றை நிரப்புவார். இப்படி நாற்பது நாட்களை ஓட்டினார்.

காசியில் மதத்தின் பெயரால் நடைபெறும் கொடுமைகளை நேரில் கண்டார். மக்களை ஏமாற்றி ஆத்திகர்கள் பணம் பிடுங்குவதைப் பார்த்து பிணங்களை எரிக்கும் இடத்தில்கூட இலஞ்சம் வாங்குவது கண்டு துடித்துப் போனார்.

காசிக்குச் சென்றால் கதி மோட்சம் கிடைக்கும் என்பார்கள். பெரியார் காசிக்குச் சென்றதால், தமிழர்கள் வாழ்வில் நற்கதி அடைந்தார்கள் என்பதுதான் அந்த வரலாறு காட்டும் உண்மை.

காசியை கால் தூசியாக மதித்து, கடும் கோபத்துடன் காசிவிட்டுப் புறப்பட்டார் கல் நெஞ்சர் பெரியார். தங்க மோதிரத்தை விற்றார். அந்தப் பணத்தைக்கொண்டு அஸ்ஸம் சூல், பூரி ஆகிய இடங்களைச் சுற்றிப் பார்த்தார். பின்னர் எல்லூர் சென்றார்.

எல்லூரில் சுப்பிரமணிய பிள்ளை என்பவர் இல்லத்தில் தங்கினார். அங்கே பெரியார் ஒரு மாதம் தங்கினார்.

ஈரோட்டில் பெரியாரின் தந்தை, நண்பர்கள், உறவினர்கள் மூலமாக… பெரியாரை வலை வீசித் தேடினார்கள். ஈரோட்டு வியாபாரி ஒருவரால் பெரியார் எல்லூரில் இருப்பதை தந்தையார் அறிந்தார். உடனே அவர் எல்லூர் சென்று பெரியாரைப் பார்த்துக் கண்ணீர்விட்டு அழுதார்.

ஊருக்குப் புறப்பட்டனர்.

அங்கே முதலியாரிடம் கொடுத்து வைத்திருந்த தங்க நகைகள் வந்து சேர்ந்தன. இவ்வளவு துன்பங்களிலும் பையன் நகைகளை விற்றுவிடாமல் காப்பாற்றியிருக்கிறானே என தந்தையார் வியந்தார்.
பெரியாரை அழைத்துக்கொண்டு தந்தை வெங்கட்ட நாயக்கர் ஈரோடு வந்தடைந்தார்.