பெரியார் ஒரு சிந்தனைச் சுரங்கம். சீர்திருத்தச் செம்மல். கடவுள் மறுப்பு, பெண் விடுதலை, எழுத்துச் சீர்திருத்தம், தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு என இப்படிப் பயனுள்ள சமூகச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தனது இறுதி மூச்சுவரை பாடுபட்டவர் பெரியார்.

“குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்”

என்ற இந்தத் திருக்குறள் பெரியாருக்கு மிகவும் பிடித்த குறள். இதன் பொருள்,
“தான் பிறந்த குடியை உயர்த்த நினைப்பார்க்கு நல்லகாலம் என்பது இல்லை.
காலத்தையும் பார்த்துச் சோம்பல்கொண்டு மானத்தை எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தால் பிறந்தகுடி அடியோடு கெட்டு அழியும்” என்பதாகும்.

பொதுநலத்தொண்டன் என்பவன் சுய கௌரவங்களைப் பார்க்கக்கூடாது. எனவே இந்தக் குறள் அவருக்குப் பிடித்த குறளாயிற்று. பெரியார் அவர்கள் இந்தப் குறளுக்கு இலக்கணமாகவே திகழ்ந்தார்.

பெரியாரின் அரிய சிந்தனையில் உதித்த சில திட்டங்களைப் பார்ப்போம்.

சாதிமுறை அடியோடு களையப்பட வேண்டும். கோயில்கள் கூடாது. பொதுவாக பிராத்தனை மண்டபங்கள் கட்டலாம்.

பெற்றோர்கள் பெண்களை 21 வயதுவரை நன்கு படிக்க வைக்க வேண்டும். அந்தப் பெண் வேலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

பிறக்கின்ற குழந்தைகளை அரசே ஏற்றுக்கொண்டு அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.
எல்லோரும் ஒரே மாதிரி ஆடை அணிய வேண்டும்.

அதிக மதிப்புள்ள தங்க நகைகளைப் பெண்கள் அணிவதை தடை செய்ய வேண்டும்.
அரசாங்க வேலை வாய்ப்புகிளல் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்.
கோயில் திருவிழாக்களை நிறுத்தி, சமூகவியல், அறிவியல், பொருளியல் கண்காட்சிகள் நடத்த வேண்டும்.

பெரியாரின் புரட்சிக் கருத்துகள் அன்று பலருக்கு எரிச்சலை அளித்தது. ஆனால், இன்று அவரது சிந்தனைகள் படிப்படியாக செயல் வடிவம் பெற்று வருகிறது என்பதையும் நாம் அறிவோம்.

பெரியார் தான் கூறிய சீர்திருத்தக் கருத்துகளை மாநாடுகள் நடத்தி அதன்மூலம் வலியுறுத்தி வந்தார். புரட்சி, பகுத்தறிவு ஏடுகளிலும் கட்டுரைகள் எழுதி மக்கள் மனத்தில் பதிய வைத்தார்.

ஓய்வு இன்றி ஓயாது முழங்கிக்கொண்டிருக்கும் போராளி போல் பணியாற்றினார்.
பெரியார் அவர்கள் முதன் முதலாக சுயமரியாதை மாநாடு நடத்தினார்.

தொழிலாளர் மாநாடு, இளைஞர் மாநாடு, விவசாயிகள் மாநாடு, நாத்திகர் மாநாடு, மாணவர் மாநாடு, சமூக நீதிப் பாதுகாப்பு மாநாடு, இந்தி எதிர்ப்பு மாநாடு எனப் பல கோணங்களில் மக்களை அவர் அணுகினார்.

உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளின் பெருமையை பறைசாற்றப் பெரியார் குறள் மாநாடு நடத்தினார். இப்படிப் பல மாநாடுகள் மூலம் மற்போக்குக் கருத்துகளை மக்களிடையே எடுத்துக்கூறினார்.

‘தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ என்று பெரியார் பாராட்டப் பெற்றார்.
பெரியார் என்றவுடன் அவரது கடவுள் மறுப்புக் கொள்கைதான் நினைவுக்கு வரும். அதே போல் பெரியார் என்றவுடன் நமக்கு அவரது சிக்கனமும் நினைவுக்கு வரும். வர வேண்டும்.

பெரியாரின் சிக்கனம்பற்றி சிக்கனமாக இல்லாமல் சற்று விரிவாகச் சிந்திப்போம்.
பெரியார் அவர்கள் வாழ்நாள் முழுதும் சுற்றுப்பயணம் செய்துகொண்டே இருந்தார். பெரும்பாலும் தொடர்வண்டியில்தான் பயணம் செய்வார். பின்னாளில் தொண்டர்கள் நிதி வசூல் செய்து எல்லா வசதியும் கொண்ட சிற்றுந்து (Van) ஒன்று வாங்கிக் கொடுத்தார்கள். இரயிலிலும், பேருந்திலும் பயணம் செல்லும்போது பெரியார் மிகுந்த சிக்கனத்தையே கடைபிடிப்பார். அப்பொழுதெல்லாம் தொடர்வண்டியில் மூன்றாம் வகுப்பு என ஒன்று உண்டு. அதில் பயணம் செய்வர் கட்டணம் குறைவு. பெரியார் அவர்கள் அதில்தான் பயணம் செய்வார். பொதுப் பணத்தை செலவு செய்வதில் அவர் மிகுந்த கவனம் செலுத்தினார்.

ஒரு முறை மதுரையில் பிரசாரம் செய்ய பெரியார் அவர்கள் ‘செங்கோட்டை பாஸஞ்சரில் தஞ்சையிலிலுந்து பயணம் மேற்கொண்டார். வண்டி திண்டுக்கல் வந்தது. திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி என்ற கிராமம் உள்ளது. சின்னாளப்பட்டி நெசவாளிகள் பெரியாரைப் பார்க்க திண்டுக்கல் இரயில் நிலையம் சென்றார்கள். பெரியாரை சந்தித்தார்கள். அப்போது ஒரு வேண்டுகோளையும் வைத்தார்கள்.

“ஐயா… மதுரையில் நாளைத்தான் கூட்டம். எங்கள் ஊர் மக்கள் தங்கள் சொற்பொழிவை கேட்க விரும்புகிறார்கள். தயவு செய்து எங்களுக்காக வாருங்கள். நாங்கள் இரவே, உங்களை மதுரையில் கொண்டு விட்டு விடுகிறோம்” என்பதுதான் அந்த வேண்டுகோள்.
பெரியார் அவர்களும் இசைவு தெரிவித்தார். அப்போது திண்டுக்கல் புகைவண்டி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார் நாராயணன் என்பவர். அவர் பெரியாரை நிலையத்தில் சந்தித்தார். அவர் கவியரசு கண்ணதாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். இலக்கிய ஈடுபாடுகொண்டவர். சிறந்த சிறுகதை எழுத்தாளர்.

“நீங்க… என்ன வேலை பார்க்கிறீங்க? “நான் இங்கே பார்சல் ஆபீஸ்ல கிளார்க்காக இருக்கிறேன்”.

அப்படியா… நல்லது. எங்க தோழர்கள் என்னை இங்கே இறங்கச் சொல்றாங்க. நாங்க.. மொத்தம் ஆறு பேர் மதுரைக்குப் போறோம். இப்போ திண்டுக்கல்ல இறங்கறோம். பயணம் செய்யாத தூரத்திற்கான பணத்தை திரும்பப் பெற முடியுமா என்று கேட்டார் பெரியார்.

“வாங்கலாம் ஐயா… ஆனால் அதுக்கு ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுக்கனும். ஆனால் பணம்… திரும்பக் கிடைக்க மூணுமாசம்வரை ஆகும்.

“சரி… பரவாயில்லே… பணம் எவ்வளவு திரும்பக் கிடைக்கும்” என்று கேட்டார் பெரியார்.
இங்கிருந்து ஆறு பேருக்கான பயணத் தொகை 13 ரூபாய், அலுவலகச் செலவு 5 ரூபாய் ஆகும். அதுபோக 8 ரூபாய் கிடைக்கும் என்றார் நாராயணன்.

சரி…. அப்போ…. விண்ணப்பம் எப்படி எழுதணும்னு சொல்லுங்க. எழுதித் தர்றேன். எட்டு ரூபாய் மிச்சம் ஆகுதே. அதை கழக நிதியில் சேர்த்துடலாம்” என்று பெரியார் அமைதியாகச் சொன்னார்.

பொதுவாழ்வில்…. பணிபுரிபவர்கள் அனைவரும் இதை எண்ணிப்பார்க்க வேண்டும். பொதுப் பணத்தை தண்ணீராகச் செலவழிப்பவர்கள் இன்று பெருகிவிட்டார்கள். பெரியார் சிக்கனக்காரர் மட்டும் அல்ல. வரவு செலவுக் கணக்கு எழுதி வருபவர். ஐந்து பைசா என்றாலும் கணக்கு எழுதிவிடுவார் பெரியார்.

பயணத்தின்போது விலை குறைந்த உணவுப் பண்டங்களைத்தான் வாங்கிச் சாப்பிடுவார்.

உடைகள்பற்றிக் கவலை கொள்ளமாட்டார். முடிவெட்டுவதோ, முகம்மழிப்பதோ அவருக்கு பிடிக்காது. நேரமும், காசும் வீணாகும் என்பார். எப்பொழுதும் தாடிதான். வெற்றிலைப்பாக்கு பழக்கம் கூடக் கிடையாது. சோப்பு, பவுடர் தொடவேமாட்டார். குளிப்பது கூட வார்ம ஒருமுறைதான். தன் உடல் நலம் குறித்து அக்கறையே கொள்ளமாட்டார்.

கழகக் கூட்டங்கள்பற்றிய “வால்போஸ்ட்”களை விடுதலை அலுவலகத்திலேயே அச்சடிப்பார். வண்ணத்தில் போஸ்டர்கள் அடிக்க சம்மதிக்கமாட்டார்.
அலுவலகத்திற்கு வரும் பார்சல் கள்ளிப் பெட்டிகளைக் கொண்டே மேஜை, நாற்காலிகள் செய்யச் சொல்வார்.

அலுவலகத்திற்கு சுண்ணாம்பு அடிப்பதைக்கூட குறைந்த கூலியில் செய்து முடித்து விடுவார்.

எடைக்கு எடை பெரியாருக்குப் பரிசுகள் வழங்குவார்கள். அதையெல்லாம் அவர் கட்சி நிதியில் சேர்ந்து விடுவார். அவருக்கு அளிக்கப்படும் கறுப்புத் துணிகளைத் தொண்டர்களுக்கு கொடுத்து விடுவார்.

உணவுப் பொருளில் அது வேண்டாம். இது வேண்டாம் என்று எதையும் ஒதுக்கமாட்டார். பிரியாணி அவர் விரும்பிச் சாப்பிடுவார்.

அலுவலகத்திற்கு வரும் தபால் உறைகளை குப்பைத் தொட்டியில் போடமாட்டார். அலுவலகப் பையன்களைகொண்டு அவற்றை மீண்டும் பிரித்து ஒட்டி புதிய உரை தயார் செய்து விடுவார்.

இப்படி எல்லா வகையிலும் மிகவும் சிக்கனத்தை கடைப்பிடித்தவர் பெரியார். அதனால்தான் இன்று திராவிடர் கழகம் விழுதுகள் ஓடி மிகப் பெரிய ஆலமரமாக ஓங்கி வளர்ந்து நிற்கிறது.

பல கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள்… ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்…. என கல்விப் பணியில் கழகம் கடமை ஆற்ற முடிகிறது.

பின்தங்கிய மாணவர்களின் அறிவுக் கண்களை திறக்க பெரியாரின் சிக்கனமே உறுதுணையாயிற்று என்பதை நாம் உணரலாம்.

பெரியார் மிகுந்த கோபக்காரர். வாய்மையும், தூய்மையும் நமது இரு கண்கள் என போற்றினார். நேர்மையில்லாதவர்களைக் கண்டால் கடுமையாகக் கோபிப்பார். ஆனால், அதே சமயம் அடுத்தவர்களின் சுயமரியாதையை மிகவும் மதிப்பார்.

ஒருமுறை நாகர்கோயிலில் சுயமரியாதை இயக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேடையில் பெரியார் அமர்ந்திருந்தார். அவர் அருகே இளைஞர் ஒருவரும் இருந்தார். அந்த இளைஞர் கால்மேல் கால் போட்டு, காலை ஆட்டிக்கொண்டேயிருந்தார். அந்த இளைஞனின் செயல்கண்டு தொண்டர்கள் கோபம் கொண்டார்கள். ஆனால், பெரியாரோ அதை பெரிதாகக் கருதவில்லை. கூட்டம் முடிந்தவுடன் தொண்டர்களில் சிலர் பெரியாரிடம் வந்தனர். அந்த இளைஞனின் மரியாதைக்குறைவான செய்கை குறித்து கோபமாகப் பேசினார்கள்.

பெரியார் கோபம் கொண்டவர்களை சாந்தப்படுத்தினார்.

நீங்கள் நினைப்பது தவறு. அது அவன் கால், அதை அவன் கால்மீது போட்டு காலை ஆட்டுகிறான். இதில் என்ன மரியாதைக் குறைவு கண்டீர்கள்? அவன் காலை என் கால்மீது போட்டு ஆட்டினால்தான் மரியாதைக் கூறைவு” என்று வெகு நிதானமாக விளக்கம் தந்தார். சுயமரியாதைச் சுடர் அவர். அவரது நாகரிகமான விளக்கம் கேட்டுத் தொண்டர்கள் வியந்து நின்றார்கள்.

அடுத்தவர்களின் சுயமரியாதையை அவர் மதித்தார். அதனால்தான் அவரோடு பழகியவன் கடைசிவரை நட்பு மாறாமல் பழக முடிந்தது.

பெரியார் நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவர். புகைவண்டிப் பயணத்தின்போது குட்டிக்கதைகள் சொல்லுவார்; புராணங்கள்பற்றிக் கிண்டல் செய்வார். சுவையான சம்பவங்களைக் கூறுவார். அவரைச் சுற்றியிருப்பவர்கள் நேரம் போவதே தெரியாமல் கேட்டு மகிழ்வார்கள்.

பொதுக்கூட்டம் வழக்கம்போல் கடவுள் மறுப்புப் பொதுக் கூட்டம். பெரியார் பேசுவதற்கு முன்பு இளைஞர்கள் யாரேனும் பேசுவது வழக்கம். அப்படி ஒரு கூட்டத்தில் தோழர் என்.வி. நடராசன் என்பவர் பேசினார். அப்பொழுது திடீரென கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவன் மேடையில் கல்லை விட்டு எறிந்தார். மேலும் இரண்டொரு கல் வந்து விழுந்தது.

என்.வி. நடராசன் திகைத்தார். பெரியாரைத் திரும்பிப் பார்த்தார்.
“பயப்படாதே நடராஜா… நீ பேசு” என்றார் பெரியார்.

பெரியார் தந்த உற்சாகத்தில் நடராஜன் தொடர்ந்து பேசினார்; பேசினார் நீண்ட நேரம் பேசினார்.

கூட்டம் பொறுமை இழந்தது. ஆனால், தோழர் நடராஜனோ இதைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

உடனே பெரியார்,

“நடராஜா போதும் பேச்சை நிறுத்து. இனிமேலும் நீ பேசினால் நானே கல்லை விட்டு எறிவேன்” என்று கூறி கூட்டத்தினரை சிரிப்பில் ஆழ்த்தினார்.

சித்திரபுத்தன் என்ற பெயரில் ‘குடிஅரசு’ இதழில் நகைச்சுவை நடையில் பல செய்திகளைத் தருவார்.

“ஐந்துக்கு ரெண்டு பழுதில்லை” “வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்” என்று வித்தியாசமாகத் தலைப்புகளும் தருவார்.

பண்பாட்டின் சிகரமாகத் திகழ்ந்த பெரியார் தனது இறுதி மூச்சுவரை ஓயெவுன்றித் தொண்டாற்றினார்.

பெரியாரின் புரட்சிகரமான போராட்டங்கள் தொடர்ந்தன.

26-1-70 இல் தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்; 22-1-71இல் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு; 30-9-73இல் கறுப்புச் சட்டை மாநாடு; என தொடர்ந்து மக்கள் விழிப்புணர்வு போராட்டங்களைப் பெரியார் நடத்தினார்.

18-11-72 முதல் 28-11-1973 வரை நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். சாதி ஒழிப்புப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இதற்கா மதுரையில் மாபெரும் மாநாட்டைக் கூட்டினார். பெரியாரின் உடல்நிலையும் மோசமாகி வந்தது. ஆனால், பெரியார் அவர்கள் தனது நோய்பற்றியோ உடல் பலவீனம் ஆவது குறித்தோ கடுகளவும் அஞ்சவில்லை.

சென்னையில் 19-12-1973 இல் தியாகராஜா நகரில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பெரியார் நீண்ட நேரம் சொற்பொழிவாற்றினார். அடுத்த நாள் பெரியாரின் உடல் நலம் மிகவும் நலிவடைந்தது. உடனடியாக வேலூர் கிறித்தவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலன் தரவில்லை.

தந்தை பெரியார் 24-12-1973 காலை ஏழரை மணி அளவில் மறைந்தார். மானிட சமுதாயம் சமத்துவமாக வாழ-தன்னையே அர்ப்பணித்த அந்தப் பகுத்தறிவு பகலவன் மறைந்தது.
பகலவனுக்கு மறைவு உண்டா?

“சிவந்த மேனி, தடித்த உடல், பெருந்த தொந்தி, நல்ல உயரம், வெளுத்த தலைமயிர், நரைத்த மீசை, நடுத்தரமான தாடி, திரண்டு நீண்ட மூக்கு, அகன்ற நெற்றி, உயர்ந்த மயிர் அடர்ந்த புருவங்கள், ஆழமான கண்கள், மெதுவான உதடுகள், செயற்கைப் பற்கள், ஒரு சாதாரண மூக்குக் கண்ணாடி.

இடுப்பில் எப்போதும் ஒரு நான்கு முழத்துணி. காலில் செருப்பு. முக்கால்கை வெள்ளச்சட்டை. சட்டைக்கு ‘மேல் ஐந்து முழப் போர்வை. காப்பி நிறக்கலர். கையில் எப்போதும் மொத்தமான தடி.

இவர்தான் பெரியார். தமிழரின் தலைவர் என்று பெரியாரை நம் மனக்கண்முன் படம் பிடித்துக்காட்டுவார் சாமி சிதம்பரனார்.

“வயதில் அறிவில் முதியோர் - நாட்டின்
வாய்மைப் போருக்கென்றும் இளையார்!
உயர் எண்ணங்கள் மலரும் சோலை!”
என்று பாடுவார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

தந்தை பெரியார் -
பகுத்தறிவுப் பெட்டகம்

தந்தை பெரியார் -
மூடநம்பிக்கைகளை வேரோடு களைந்த சமூகச் சிந்தனையாளர்.
பெரியாரின் தத்துவங்களைப் பின்பற்றினால், சிறியார் எல்லாம் பெரியார் ஆவார்.
உலகச் சிந்தனையாளர்கள் வரிசையில் இடம் பெற்றுவிட்டார் பெரியார். அவரின் உன்னத சிந்தனைகள் மனித மனங்களை செழுமைப்படுத்தும்.