“பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா” என்று பாராட்டுவார் ஏ.எஸ்.கே அய்யங்கார்.
ஏ.எஸ்.கே. அய்யங்கார் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவராவார். சென்னைத் துறைமுக தொழிற்சங்கத் தலைவராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். பெரியாருடன் இணைந்து பணியாற்றியவர்.

“பெரியார் ஈ.வெ.ரா பிராமணர்களை வெறுப்பவர் கிடையாது. ஆனால், பெரும்பாலான பிராமணர்கள் அவ்வாறு நினைக்கிறார்கள். அது தவறான கருத்து. பெரியார் பிராமணீயத்தைத்தான் எதிர்த்தார். அதாவது கடவுள் மற்றும் புராணங்கள், இதிகாசங்களைப் போற்றும் அந்தக் கொள்ளையைத்தான் எதிர்த்தார்” என்று ஏ.எஸ்.கே. அய்யங்கார் தெளிவுபடுத்தியுள்ளார். அதுதான் உண்மையும் ஆகும்.
பெரியார் ஒரு நட்புக்கடல். அவருடன் நட்புக்கொண்டவர்கள் வாழ்நாள் முழுவதும் பெரியாரைப் பாராட்டியே வந்துள்ளனர். அப்படி அவரிடம் நட்புக்கொண்டவர்களில் பிராமணர்களும் உண்டு. குறிப்பாக மூதறிஞர் ராஜாஜி அவர்கள் பெரியாருடன் நெருங்கிய நட்புக்கொண்டு பழகி வந்தார். ராஜாஜி அவர்கள் தனது இறுதிக்காலம் வரை பெரியாருடன் நட்பு பாராட்டி வந்தார்.

“அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்ல்ல் உழ்ப்பதாம் நட்பு”

என்ற குறளுக்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவர் பெரியார்.
அறசியல் வேறு; மனிதாபிமானம் வேறு. இரண்டையும் ஒன்றாக்க் கலக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் பெரியார்.
பிறர் மனம் தனிப்பட்ட முறையில் புண்பட்டுவிடக்கூடாது என்பதிலும் பெரியார் உறுதியாக இருந்தார். அதனால்தான் அவரால் ராஜாஜி அவர்களுடன் இறுதிக் காலம்வரை நட்புடன் உறவாட முடிந்தது.

ராஜாஜி அவர்கள் மறைவின்போது கண்ணீர் விட்டுத் தேம்பித் தேம்பி அழுதார் பெரியார். தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல் சுடுகாடுவரை சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.

அப்போது பெரியார் அவர்களால் நடக்க முடியாத சூல்நிலை. சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார் பெரியார். தலைநகர் தில்லியிலிருந்து அன்றையக் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களும் ராஜாஜியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்திருந்தார். அவர் உட்காருவதற்கு இருக்கை இல்லை. உடனே சற்றும் தாமதியாது தனது உடல் துன்பத்தையும் மறந்து தான் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியில் உட்காரும்படி வேண்டினார் பெரியார்.

பெரியார் நட்புக்கடல் மட்டுமல்ல. பண்பாட்டுக் காவலரும் ஆவார்.

தமிழ்த்தென்றல் திரு.வி. கல்யாண சுந்தரனார் அவர்கள் பெரியாரின் பாசத்திற்குரிய நண்பர்களில் ஒருவராவார்.

திரு.வி.க. அவர்கள் ஒருமுறை பெரியாரின் இல்லத்தில் விருந்தினராக தங்கினார். இரவு நீண்ட நேரம் நண்பர்கள் இருவரும் உரையாடி மகிழ்ந்தார்கள். மறுநாள் காலை திரு.வி.க. எழுந்து காலைக் கடன்களை முடித்தார்; குளித்தார்; உடை மாற்றினார்.

அந்த நேரம் -

பெரியார் அவர்கள் திரு.வி.க. முன்பு திருநீற்றுச் சம்படத்தை நீட்டினார். திரு.வி.க வியந்து போனார்.

“நீங்கள் கடவுளை நம்பாதவர். உங்கள் வீட்டில் திருநீறு எப்படி வந்தது?” திரு.வி.க திகைப்புடன் கேட்டார்.

“நான் கடவுளை நம்பாதவன்தான். ஆனால் தாங்கள் கடவுள் நம்பிக்கைகொண்டவர். எனது விருந்தாளியாக வந்து தங்கியுள்ளீர்கள். விருந்தினரின் விருப்பம் அறிந்து செயல்படுவது தான் நல்லது” என்று பெரியார் விளக்கம் அளித்தார்.

திருநீறு பூசிய தமிழ்த்தென்றல் திரு.வி.க., புரட்சிப்புயல் பெரியாரின் திருஉள்ளம் கண்டு மெய்சிலிர்த்து நின்றார்.

தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் காலமான செய்தி கேட்டு, ஈரோட்டில் இருந்து விரைந்து வந்தார் பெரியார். இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார். ஆனாலும் பெரியார் மனத்தில் வேறோரு வேதனை தோன்றியது. அது தொழிலாளர்களின் தோழர் பொதுத்தொண்டே வாழ்வெனக்கண்ட பெருந்தகையாளர் திரு.வி.க அவரது மறைவின்போது கூட்டம் குறைவாக இருப்பது கண்டு பெரியார் துடித்துப் போனார். அடுத்த வினாடியே திராவிடர் கழகத் தொண்டர்கள் பலரையும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளக் கட்டளையிட்டார். அதுமட்டுமல்ல,

“நமச்சிவாய வாழ்க. . .
நாதன்தாள் வாழ்க . . .

என்று திரு.வி.க.விற்குப் பிடித்தமான பதிகத்தையும் உரத்துக் கோஷம் போடவைத்தார் பெரியார்.

பெருந்தன்மையின் உச்சியில் பெரியார் நின்றார் என்பதையே நாம் இச்சம்பவத்தால் உணரலாம். இப்படி ஒரு மனிதன் இனிவரும் நூற்றாண்டில் தோன்றுவானா? மனம் விடை காணமுடியாமல் தவிக்கிறது.
ஏழை மக்களின் துயர் துடைகப் பல திட்டங்கள் தீட்டி செயல்படுத்தியவர் காமராஜர்; கர்மவீரர் காமராஜர். ஏழைப்பங்காளர் என்று போற்றப்பட்டவர் காமராஜர். தாழ்த்தப்பட்ட மக்கள், பாட்டாளி மக்கள், விவசாயத் தோழர்கள் எல்லோரும் அவரைத் தெய்வமாகக் கொண்டாடினார்கள். பள்ளி மாணவர்கள் வறுமையின் காரணமாக படிப்பைப் பாதியில் விட்டு விடும் கொடுமையை அறிந்தார். காமராஜர் கல்விதான் மனிதனுக்கு அழியாத சொத்து என்றார் அவர். எனவே அவர் பள்ளி மாணவர்களுக்கு பசி போக்கிட மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். பசிப்பிணி போக்கினார். அதே சமயம் அறியாமையையும் நீக்கினார். ஏழை மாணவர்கள். பின்தங்கிய மாணவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றினார். எனவே அவர் “கல்விக் கண் திறந்த காமராஜர்” எனப் பாராட்டப் பெற்றார்.
காமராஜர் தமிழர்; பச்சைத் தமிழர், தமிழர் ஒருவர் தமிழ் நாட்டின் முதல்வராகத் திறம்படப் பணியாற்றுகிறார். அதுவும் திராவிடர் கழகத்தின் கொள்கைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கிறார் என்படை உணர்ந்த பெரியார் காமராஜருக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்.

கருப்புச்சட்டை அணியாத பெரியாரின் தொண்டர் என்று கூட காமராஜர் அழைக்கப்பட்டார். காமராஜர்-பெரியார் நட்பு காலத்தால் மறக்கப்படாதது. காமராஜர் தமிழக மிதல்வராக எட்டாண்டு காலம் சீரிய முறையில் தொண்டாற்றினார். பெரியார் அவர்கள் எட்டாண்டு காலம் எல்லா வகையிலும் காமராஜருக்கு துணைநின்றார்.

திராவிடர் கழகத்தின் சுயமரியாதை சிந்தனை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் விரைவாகப் பரவத் தொடங்கிற்று. பெரியாரின் புரட்சிகரமான பேச்சும் எழுத்தும் இளைஞர்களைக் கவர்ந்து இழுத்தது.
பெரியாரின் கொள்கைகளில் பெரிதும் மனம் பறி கொடுத்தவர்கள் பட்டியலை எழுதினால் பக்கங்கள் போதாது.

பேரறிஞர் அண்ணா, நாற்பதாண்டுக் காலமாக பெரியாருடன் பழகியவர். அண்ணாவின் அடுக்குமொழிப் பேச்சைக் கேட்டு அசந்தவர்கள் ஏராளம். அடுக்குமொழியில் வசனங்கள் எழுதுவதில் அவருக்கு இணை அவரே.

கலைஞர் கருணாநிதி அண்ணாவின் வழியில் எழுதியும் பேசியும் வந்தார். அஞ்சா நெஞ்சமும் சொல்வன்மையும்கொண்ட இளைஞர் அணி அன்று பெரியாருக்குத் துணை நின்றது.

வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் ஏற்படுவதுபோல பொது வாழ்வில் ஈடுபட்டவர்கள் வாழ்விலும் இன்பங்களும் துன்பங்களும் மாறி மாறி வரும்தானே!

பெரியாரின் குடும்ப வாழ்விலும் ஒரு திருப்பம் வந்தது. பெரியாரின் அன்பு மனையாட்டி திருமதி. நாகம்மையார் இறந்துவிட்டார். அதன்பிறகு பெரியார் திடீரென மறுமணம் செய்து கொள்ள எண்ணம் கொண்டார்.
திராவிடக் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட மணியம்மை என்ற பெண்மணியை 9-7-1949 ஆம் ஆண்டு மணந்து கொண்டார். அப்போது பெரியாருக்கு வயது 72. மணியம்மையோ 26 வயது நிரம்பிய குமரிப்பெண்.

பெண் உரிமை, பெண் விடுதலை என்று பேசியும், எழுதியும் வரும் பெரியார் இப்படிச் செய்த்து கழகத்தில் உள்ள இளைஞர்களுக்குப் படிக்கவில்லை. கடும் கோபம்கொண்டு கழகத்தை விட்டு வெளியேறினார்கள்.

பேரறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் தோன்றியது. கலைஞர் உள்ளிட்டோர் அக்கட்சியில் முக்கிய பொறுப்பையும் ஏற்றார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தின் சொத்துக்களைப் பாதுகாக்கவே திருமணம் செய்துகொண்டார். 23-9-1952 இல் “சுயமரியாதைப் பிரசார நிறுவனத்தை” முறைப்படி பதிவு செய்தார். இதன் பிறகு இயக்கத்திற்குப் போதிய அளவு சொத்துக்களைச் சேர்ந்தார். தற்போது அந்த நிறுவனத்தின் வளர்ச்சி தமிழகத்தில் பெரியாரின் இலட்சியங்களின் வளர்ச்சியாக இருந்து வருகிறது.
பெரியாரின் எண்ணங்களைப் புரிந்துகொள்ளாமல் இளைஞர்கள் பிரிந்து சென்றார்கள். பெரியார் அவர்களைப்பற்றிக் கவலைப்படவில்லை. கண்ணீர்த்துளிகள் என்று கண்டனம் செய்தார். கட்டுரைகள் எழுதினார்.
ஆனால் -
அண்ணா-பெரியார் நட்பு, கலைஞர்-பெரியார் நட்பு முறியவில்லை. முன் எப்போதையும்விட நெருக்கமாகவே அவர்கள் நட்பு வளர்ந்தது.
திராவிட முன்னேற்றக் கழகம் 1967 இல் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது,
“தி.மு.க ஆட்சியைப் பெரியாரிடம் காணிக்கையாக அளிக்கிறேன்” என்று அண்ணா அவர்கள் கூறினார்.
நட்பின் கடலாம் பெரியார், அண்ணாவிற்குத் தன் ஆதரவுக் கரம் நீட்டினார்.
குன்றக்குடியில் ஒரு சைவ மடம் உள்ளது. மடத்தின் தலைமைத் துறவி பொன்னம்பல அடிகளார் ஆவார். அவரை குன்றக்குடி மடாதிபதி என்று மக்கள் அழைப்பார்கள்.
குன்றக்குடி மடாதிபதி பகுத்தறிவுப் பகலவன் பெரியார் அவர்களிடம் இடையறா அன்புகொண்டிருந்தார்.
பெரியார் எல்லா மக்களும் இன்புற்று வாழவேண்டும் என ஆசைப்படுகிறார். மனிதர்களில் ஏற்றத்தாழ்வு கூடாது. சாதிச் சண்டைகள் ஒழிய வேண்டும். இக்கொள்கைகள் எல்லாம் நமக்கு என்றுரைப்பார் குன்றக்குடி அடிகளார்.

எனவே காவியும், கறுப்புச் சட்டையும் நட்பு கொண்டன. பெரியார் - அடிகளார் நட்பு வரலாற்றுச் சிறப்புடைய நட்பு. தமிழக மக்கள் இப்பெருமக்களின் நட்பால் பெற்ற பயன்கள் ஏராளம்….. ஏராளம்…….

எல்லா ஆறுகளும் கடலை நோக்கி ஓடிவருவது இயற்கை. கடலில் கலப்பதும் இயற்கை. அதுபோல பண்பாளர்கள் எல்லாரும் தந்தை பெரியாரின் கடல் போன்ற சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அந்தக் கடலை நோக்கி ஓடிவந்தார்கள். கடலுடன் சங்கமம் ஆனார்கள்.

இன்றைய அரசியல் உலகில் பெரியாரைப்போல் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை தேடித்தான் பார்க்க வேண்டியுள்ளது.